உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், வசந்த பஞ்சமியான நேற்று ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வசந்த பஞ்சமி நாளான நேற்று, அமிர்த ஸ்னான் நிகழ்ச்சி நடந்தது. கடந்த அமாவாசை நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று அதிகாலை 4 மணிக்கு புனித நீராடல் தொடங்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மட்டும் 2 கோடியே 33 லட்சம் பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.