இந்திய மருந்துகளின் மூலம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் ஐஐடி மெட்ராஸ் புதிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த தரவுத்தளம் செயல்படும் விதம் குறித்தும் புற்றுநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
உலகளவை ஒப்பிடும் போது இந்தியாவில் 9 நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்தகால தரவுகளின் படி அடுத்த 30 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பால் இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ வல்லுநர்கள் மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மருத்துவத்துறையின் அடிப்படையில் புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் பத்தில் ஒருவருக்கு மட்டுமே பலனளிக்கும் நிலையில் மீதமிருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், இந்தியர்களின் வம்சாவளி புற்றுநோயை கண்டறியும் வகையிலும் ஐஐடி மெட்ராஸ் பாரத் கேன்சர் ஜெனோம் அட்லஸ் என்ற புற்றுநோய் குறித்த தரவுகள் அடங்கிய பிரத்யேக தரவுத் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் சுமார் 500 முதல் 900 வரையிலான புற்றுநோய் மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி, இந்தியர்களின் மரபணுவில் புழக்கத்தில் இருக்கும் புற்றுநோயை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல சிகிச்சை அளிக்க உதவுவதே இந்த தரவு தளத்தின் நோக்கமாகவும் உள்ளது.
மருத்துவ வல்லுநர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் புற்றுநோய் தாக்கம் குறித்த புரிதலை உணர்ந்து இந்தியர்களுக்கு தகுந்தார் போல மருந்துகளை உற்பத்தி செய்து சிகிச்சை அளிக்க இந்த தரவுத் தளம் உதவும் எனவும் கூறப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ள இந்த தரவுத் தளத்தில் இந்தியாவின் எந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கூடுதல் மாதிரிகளை பரிசோதனை செய்து புதிய தரவுகளை சேகரித்தாலும் அவற்றையும் பதிவேற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் வருவதை முழுமையாக தடுக்க முடியாத சூழலில், அவற்றின் தன்மையை உணர்வதற்கும், அதன் வீரியத்திற்கு ஏற்றார்போல சிகிச்சை வழங்குவதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்கிறார் ஐஐடி இயக்குனர் காமகோடி
தொழில்துறை மற்றும் உற்பத்தியில் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியர்களின் மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் புற்றுநோய் இல்லாத இந்தியாவாக மாற்றும் ஐஐடி மெட்ராஸின் முயற்சி அனைத்து வகையிலும் பாராட்டுதலுக்குரியது.