சென்னை அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய 2 வடமாநில இளைஞர்களை, சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே காரில் குட்கா கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் செல்லவே, சினிமா பாணியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, காரில் இருந்தவர்கள் இறங்க மறுத்ததால், காரின் கண்ணாடியை உடைத்து அவர்களை வெளியே வரவழைத்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராவத் என்பதும், ஆந்திராவில் இருந்து குட்கா வாங்கி வந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 530 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதில், தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.