ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், 237 வாக்குச்சாவடிகளும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காலை 11 மணி நிலவரப்படி 25 புள்ளி ஒன்பது எட்டு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.