சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரிடம் இரு நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் நல குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது யாரேனும் உங்களிடம் தவறுதலாக நடந்துள்ளார்களா? என மாணவிகளிடம் கேட்கப்பட்டது.
இதற்கு தாங்கள் பள்ளிக்கு சென்று வரும்போது சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர், மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட 7 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணைக்கு பின்னரே இன்னும் எத்தனை மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் முழுவிவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.