புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜு என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இவர், கடந்த 2 -ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், ராஜூவின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதனையடுத்து, தானமாக பெறப்பட்ட அவரது உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்க உள்ளது.