தெலுங்கானா மக்கள் தொகையில் 56.33 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விழுந்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய பாஜக அரசு நடத்த தயங்குகிறது என நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தெலங்கானாவில் 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி தந்தது.
மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 2024 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4ஆம் தேதி, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
அதன்படி, மாநிலத் திட்டத் துறையால் கடந்த நவம்பர் 6ம் தேதி முதல் 50 நாட்களில் 3,54,77,554 மக்களிடமும் 96.9 சதவீத வீடுகளிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாநிலத்தில் வாழும் 16 லட்சம் மக்களின் தரவுகள் கிடைக்கவில்லை. இது மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமாகும். இவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
94,261 கணக்கெடுப்புத் தொகுதிகளில், 94,863 கணக்கெடுப்பாளர்கள், 9,628 மேற்பார்வையாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 76,000 DTP ஆபரேட்டர்கள், 36 நாட்களுக்குள் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை டிஜிட்டல் மயமாக்கினர்.
இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, அமைச்சரவை துணைக் குழுவின் தலைவர் பொது விநியோகத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டியிடம் சமர்பிக்கப் பட்டது. இந்த அறிக்கையில், முஸ்லிம் சிறுபான்மை இஸ்லாமியரைத் தவிர்த்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தெலுங்கானாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்.
தெலுங்கானாவில் இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 1,64,09,179 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 46.25 சதவீதமாகும். பட்டியலின சமூகத்தினரின் எண்ணிக்கை 61,84,319 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 17.43 சதவீதமாகும். பட்டியலின பழங்குடி சமூகத்தினரின் மக்களின் எண்ணிக்கை 37,05,929 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 10.45 சதவீதமாகும். இதர ஜாதி பிரிவினரின் மக்கள் தொகை 44,21,115 ஆகும். இது மக்கள் தொகையில் 13.31 சதவீதமாகும்.
தெலுங்கானாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் தொகை 44,57,012 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 12.56 சதவீதமாகும். இதில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் எண்ணிக்கை 35,76,588 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 10.08 சதவீதமாகும். மேலும், உயர்ஜாதி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 8,80,424 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 2.48 சதவீதமாகும். ஏற்கெனவே தெலுங்கானாவில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டு வருகிறது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் தெலுங்கானாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய பிற்படுத்தப் பட்டோர் சங்கத் தலைவர் ஆர். கிருஷ்ணய்யா, தெலுங்கானா மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வகுலாபரணம் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் தலைவர்கள் அனைவரும், வரும் உள்ளாட்சித் தேர்தலில்,பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 56.3 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியும் வலியுறுத்தி உள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி அமைப்புகளும் இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கெனவே கர்நாடகாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட கூடாது என கர்நாடகாவின் துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவதா/ வேண்டாமா என்ற குழப்பத்தில், கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா 7 ஆண்டுக்களுக்கும் மேலாக அதை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.
இதன் காரணமாகவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்டு உள்ளது. இப்போது தெலுங்கானாவிலும் அதே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு காங்கிரஸ் கட்சிக்குள் சிக்கலை உருவாக்கி உள்ளது.
மக்கள்தொகை அளவுக்கு விகிதாசார உரிமைகள் என்ற ராகுல் காந்தியின் முழக்கத்தால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் வெளியே வரவே முடியாமல் காங்கிரஸ் கட்சி சிக்கிக் கொண்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.