பிரேசில் நாட்டில் ஒரு பசுமாடு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஒரு பசுமாட்டை வாங்க கோடிகளை செலவழிக்க நேரிடும் என்பது நமக்கு நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராஸ் நகரில், 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 40 கோடிகளை அள்ளிக்கொடுத்து ஒரு பசுமாட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.
வயாடினா-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெலோர் ரக பசுமாடுதான் அத்தனை கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. அப்படி கோடிகளை கொட்டி வாங்கும் அளவிற்கு இந்த பசுமாட்டில் என்ன தனித்தன்மை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
பெரும்பாலான பசு இனங்கள் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றிலிருந்து விதிவிலக்காக உள்ள ஒருசில இனங்களே, அதன் தனித்துவமான பண்புகளுக்காக மதிக்கப்படுகின்றன. பல கோடிகளுக்கு விற்பனையாகின்றன. இந்தியாவைச் சேர்ந்த பிராமன் (Brahman) பசுக்களையும், ஜப்பானைச் சேர்ந்த வாக்யு (Wagyu) பசுக்களையும் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டுகள். மிக தூய்மையானதாக கருதப்படும் இந்த பசுமாட்டினங்கள், எந்தவிதமான வெப்பநிலையிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இருப்பதால், உலகளவில் அவற்றின் தேவை அதிகமாக இருக்கிறது.
‘வயாடினா-19’ என பெயரிடப்பட்ட இந்த நெலோர் ரக பசுமாடும் யாரும் எதிர்பார்க்காத வகையில், 40 கோடிகளுக்கு விற்பனையாகி தற்போது அப்படியொரு வரலாற்றை படைத்திருக்கிறது. மிக தனித்துவமான உடலமைப்பைக்கொண்ட இந்த பசுமாடு ஆயிரத்து 101 கிலோ எடைகொண்டது. இது ஒரு பசுமாட்டின் சராசரி எடையை விட இரு மடங்கு அதிகம். ‘வயாடினா-19’ அதன் உடல் அம்சங்களால், மிக வெப்பமான பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக திகழ்கிறது.
தனித்துவமான உடலமைப்பு என்று சொல்லும்போதே புரிந்திருக்கும், ‘வயாடினா-19’ வெறும் விலையுயர்ந்த பசுமாடாக மட்டுமல்ல, வெள்ளை நிறத்தில் பளபளவென மின்னும் தோல் அமைப்பாலும், மிரளவைக்கும் பெரிய திமிலாலும் மிக அழகானதாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த பசுமாடு, அமெரிக்காவில் நடந்த ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி வேல்டு’ (Champions of the World) போட்டியில் பங்கேற்று ‘மிஸ் சவுத் அமெரிக்கா’ (Miss South America) என்ற பட்டத்தையும் தன்வசப்படுத்தியிருக்கிறது.