டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57 புள்ளி 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஆம் ஆத்மியும், காங்கிரசும் 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது.
மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சியும் போட்டியிட்டன. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 96 பெண்கள் உள்பட மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி 57 புள்ளி 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் முடிவு வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக சீலாம்பூர் தொகுதியில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக கூறி பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. இதைத் தவிர்த்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.