தைப்பூசத்தை முன்னிட்டு 425வது ஆண்டாக நகரத்தார்கள் 329 காவடிகள் சுமந்து பாதயாத்திரை சென்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்களே அதிகம். குறிப்பாக திண்டுக்கல் சாலை, பழைய தாராபுரம் சாலை வழியாக காவடி எடுத்து பக்தர்கள் வருகின்றனர்.
இதில் குழுவாக பாதயாத்திரை வருபவர்கள் வேன், லாரி போன்றவற்றில் சமையலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி வருகின்றனர். வரும் வழியில் சாலையோரம் தங்கி சமைத்து சாப்பிடுவதுடன், மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர். மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ முகாமும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதனை சுற்றியுள்ள செட்டிநாட்டு நகரத்தார்கள், 425 வது ஆண்டாக 329 காவடிகள் சுமந்து பாதயாத்திரையாக குன்றக்குடி வந்தடைந்தனர்.
அங்கிருந்து கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக சுமார் 180 கிலோ மீட்டர் கடந்து வரும் 10ஆம் தேதி பழனி சென்றடைவர். வரும் 13ஆம் தேதி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அதன் பின் அனைத்து நகரத்தார்களும் பழனியிலிருந்து பாதையாத்திரையாகவே சொந்த ஊர் திரும்புகின்றனர்.