ChatGPT மற்றும் DeepSeek ஆகிய AI சாட்பாட்களை அலுவல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? பின் வரும் செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுள் ஒன்று. அமெரிக்காவைச் சேர்ந்த OpenAI நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு ChatGPT என்ற சாட்பாட்டை உருவாக்கி புதிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள மற்ற பிரபல நிறுவனங்கள் மட்டுமின்றி, பல சர்வதேச நிறுவனங்களும் புதிய சாட்பாட்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கின. ChatGPT சர்வதேச அளவில் ஏற்படுத்திய அந்த தாக்கமே, ஒவ்வொரு நாடும் தங்களுக்கென பிரத்தியேக AI சாட்பாட்டை உருவாக்க மும்முரம் காட்டியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழலில், சீன நிறுவனத்தால் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட DeepSeek AI சாட்பாட், அண்மையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய AI சாட்பாட் ChatGPT-யின் தாக்கத்தில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என கூறப்பட்டாலும், DeepSeek AI சாட்பாட்டின் வேகமும், செயல்பாடும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த இரு AI சாட்பாட்களையும் ஒப்பிட்டு, மதிப்பீடு செய்யும் பணிகளை பயனாளர்கள் மேற்கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு இந்த சாட்பாட்கள் அபாயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக்கூறி, ChatGPT மற்றும் DeepSeek ஆகிய AI சாட்பாட்களை அலுவல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பாணை ஜனவரி 29-ம் தேதியே வெளியிடப்பட்டாலும், OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) விரைவில் இந்தியா வரவுள்ளதாக வெளியான தகவலே மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையை வெளிச்சமிட்டு காட்டியது. அவரது வருகைக்கான காரணம் பற்றி அலசும்போது, சாம் ஆல்ட்மேன் மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதும் தெரியவந்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பாணை வெளியானதற்கு பின் அவசர அவசரமாக திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கும் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக DeepSeek AI-யின் அதிவேக வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய சர்வர்களில் (Server) ஓப்பன் சோர்ஸ் மாடல்களை (Open Source Model) பொருத்துவதன் மூலம் DeepSeek-ஐ சுற்றியுள்ள தரவு தனியுரிமைச் சிக்கல்களை தீர்க்க முடியும் என கூறினார். மேலும், சொந்த சாட்பாட்களை கொண்டு உலகளாவிய AI பந்யத்தில் நுழைவதற்கான இந்தியாவின் திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.
குறிப்பாக உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ள AI சாட்பாட்களால் மற்ற பிரபல AI சாட்பாட்களுடன் போட்டிபோட முடியும் என்றும், அல்காரிதம் (Algorithm) செயல்திறனுடன் இந்த AI சாட்பாட்களை மிக குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மிக விரைவில் உலக தரத்திலான AI சாட்பாட்களை இந்தியா உருவாக்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டிருந்தார்.
எது எப்படியோ வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம்தான், கொடிகட்டி பறக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட்டு, மனித குலத்திற்கு நன்மை பயக்குமா என்பதே இங்கு பலரின் கேள்வி…?