புற்று நோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் நாட்டு இளவரசி கேட், அதிலிருந்து மன ரீதியாக தன்னை மீட்க உதவும் Forest Bathing என்கிற சிகிச்சை முறை குறித்தும், அதன் குணப்படுத்தும் ஆற்றல் மீது தனக்குள்ள நம்பகத்தன்மை குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
Forest Bathing என்பது ‘ஷின்ரின் யோகு’ (Shinrin Yoku) எனப்படும் ஒரு ஜப்பானிய சிகிச்சை முறையாகும். வனப்பகுதியின் சூழலை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மனநிலையை சீராக்கி அதனை மேம்படுத்தவும் உதவுகின்ற சிகிச்சை முறையே ‘ஷின்ரின் யோகு’ அல்லது Forest Bathing என்றழைக்கப்படுகிறது. இது 1980-களில் முதன்முதலாக ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
காடுகளின் காட்சிகள், ஒலிகள், வாசனைகளுடன் ஒன்றிக்கிடக்கும் இந்த சிகிச்சை முறை, நோய் எதிர்ப்புக்கான உயிரணு செயல்பாட்டை அதிகரித்து, புற்றுநோய் எதிர்ப்பு புரதங்களை வெளிப்படுத்த உதவுகிற ஒரு இயற்கை நடைமுறை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பலர் இயற்கையுடன் ஒன்றிய இந்த சிகிச்சை முறையால் பயனடைந்து வரும் நிலையில், தற்போது வேல்ஸ் நாட்டு இளவரசியான கேட் என்கிற கேத்தரினும், Forest Bathing சிகிச்சை முறையின் குணப்படுத்தும் சக்தி மீது தனக்கு உள்ள நம்பகத்தன்மையை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.
வேல்ஸ் நாட்டு இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும், இளவரசியுமான கேட் என்கிற கேத்தரின், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பாட்டார். வழக்கமான கீமோதெரபி (Chemotheraphy) போன்ற புற்று நோய் சிகிச்சைகளுக்கிடையே, ரம்யமான வனப்பகுதியில் Forest Bathing சிகிச்சை முறையையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மனம் திறந்துள்ள இளவரசி கேட், வனப்பகுதியின் ரம்யமான சூழலை ரசித்தபடி தான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழ் தனது கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
அதில், கடந்த இரண்டு மாதங்களாக வெளியாகும் ஆதரவு மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளால் நெகிழ்ச்சியடைந்ததாகவும், தனக்கும், கணவர் வில்லியம்ஸுக்கும் வாழ்க்கையில் கடினமான காலத்தை கடக்க அது உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், தனிப்பட்ட விருப்பங்களில் நேரத்தை செலவிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நிச்சயமற்ற நிலையில் பொறுமையாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டிருப்பதாகவும், தனது உடலை உணர்ந்து, அது குணமடைய தேவைப்படும் நேரத்தை எடுத்துக்கொள்ள தான் அனுமதிப்பதாகவும் இளவரசி கேட் கூறியுள்ளார்.
ஒருவர் மேல்நோக்கி பார்ப்பது தன்னம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த புகைப்படத்திலும் மேல்நோக்கி பார்த்தப்படி காட்சியளிக்கும் இளவரசி கேட், புற்றுநோயிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை வெல்ல நினைக்கும் பலருக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாக பிரதிபலிக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இளவரசி கேட்டின் இந்த பதிவு 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து, 29 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளியிருக்கிறது.