ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்திலிருந்து விலக வேண்டுமென ஊழியர்களை நிர்வாகம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து 400கும் மேற்பட்டோர் நிறுவன தலைவரை சந்திக்க முற்பட்டதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்டதாக சங்கத்தின் 3 நிர்வாகிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர், 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.