போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கடந்த 45 மாதங்களாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளி மாணவியை அப்பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும் வரும் 8ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, அசோக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.