இலவச ரேஷன் திட்ட பயனாளர்களை வருமான வரித்துறை தகவல் மூலம் சரிபார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத ஏழைக் குடும்பங்களுக்கு மட்டும் இலவச உணவு தானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதற்காக 2025-26 பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
இதில் தகுதியுள்ளவா்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன் திட்ட பயனாளர்களை வருமான வரித்துறை தகவல் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலவச உணவுத் திட்டத்தில் பயனடைவோரின் ஆதாா் எண், வருமான வரித்துறை தரும் தகவலை ஒப்பிட்டு வருமான வரி செலுத்துவோா் உணவு தானியத்தையும் இலவசமாக பெற்று வருகிறாா்களா என்பது கண்டுபிடிக்கப்படும் என்றும், அவ்வாறு பெற்று வருவது தெரியவந்தால், அவா்களின் பெயா் இலவச உணவு தானிய விநியோகப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.