வேலூர் அருகே சாலைப் பணிக்காக வைத்திருந்த தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது லாரி ஏறி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் சென்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் சாலைப் பணிக்காக வைத்திருந்த தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஐடிஐ மாணவர்கள் 3 பேர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதனிடையே, இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி மோதியதில், ஜீவா, ஹரிஹரன் ஆகிய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சூர்யா என்ற மாணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.