ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களில் இருவர், வேட்புமனுக்களில் பல தகவல்களை மறைத்து முறைகேடாக போட்டியிட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், வேட்பாளர்கள் மீதான புகார் தொடர்பான கோரிக்கையை மட்டும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் முடிந்து விட்டதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.