அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஞானசேகரனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர், பல்வேறு நபர்களுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது.
செல்போனில் பேசியிருப்பது ஞானசேகரன் தானா என்பதை உறுதிசெய்வதற்காக குரல் மாதிரி பரிசோதனை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.