சட்டவிரோதமாக குடியேறிய அவரவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக, 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன ? அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக எப்படி போகிறார்கள் ? அப்படி செல்லும் பாதையை டங்கி பாதை என்று சொல்வது ஏன் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் 47வது அதிபராக, ட்ரம்ப், இரண்டாவது முறை, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்றவுடன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த உத்தரவிட்டார். மேலும், மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவிக்கப் பட்டது.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சட்ட விரோதமாக குடியேறிய 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது .
டெக்சாஸ், கலிபோர்னியா உள்ளிட்ட அமெரிக்காவின் 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை சட்ட விரோதமாக குடியேறிய 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் படுகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் 7,25,000 இந்தியர்கள் உள்ளனர். சட்ட விரோதமாக 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்க மேற்கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்ததாக, 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலான இந்தியர்கள், மத்திய அமெரிக்க நாடுகளான (Panama) பனாமா, (Costa Rica) கோஸ்டாரிகா, ( El Salvador )எல் சால்வடார் மற்றும் (Guatemala) குவாத்தமாலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வழியாக அமெரிக்க எல்லையை அடைகிறார்கள். பிறகு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையை நடந்தே கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதற்காக, அவர்கள் டங்கி பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தாவி செல்வதை பஞ்சாபி மொழியில் டங்கி என்கிறார்கள். ஆகவே இந்த வழியில், நாடு நாடாக தாவி அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக செல்வது டங்கி எனப்படுகிறது.
டங்கி வழியாக, அமெரிக்காவுக்குள் அழைத்து செல்வதற்கென்றே முகவர்கள் உள்ளனர். இத்தகைய முகவர்களுக்கான கட்டணம் குறைந்த பட்சம் 44 லட்சத்தில் இருந்து, அதிக பட்சம் 87 லட்சம் ரூபாய் வரை ஆகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
டங்கி முகவர்களிடம் பணம் செலுத்திய பிறகு, ஈக்வடார், பொலிவியா அல்லது கயானா போன்ற நாடுகளுக்கு விசா எடுத்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சில வேளைகளில், துபாயிலிருந்து மெக்சிகோவுக்கு நேரடி விசா மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
லத்தீன் அமெரிக்காவில் உள்ள எந்த நாடுகளையும் சென்று அடைவது தான் டங்கி பாதையின் முதல் படியாகும். அதன் பிறகு, ஆபத்தான காடுகள் வழியாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையைச் சென்று அடைகிறார்கள்.
இந்தக் கடினமான டங்கி பயணத்தில் எல்லோரும் தப்பிப்பிழைப்பதில்லை. சுமார் 12 சதவீதம் பேர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். மேலும், உரிய பணம் செலுத்தாத மக்களை முகவர்களே கொன்று விடுகின்றனர்.
கடும்பனி, கடும்வெப்பம், பெரும்மழை, வெள்ளம் மலைகள் இருண்ட காடுகள் வழியாக கடத்தல் காரர்களின் துன்புறுத்தல், பாலியல் வன்முறை இவற்றைத் தாண்டி அமெரிக்க எல்லையை அடைகின்றனர்.
பிறகு அமெரிக்காவின் எல்லையை நடந்தே கடந்து நாட்டுக்குள் நுழைகின்றனர். இத்தனை கஷ்டப் பட்டு வந்து கடைசியில் எல்லைக் காவல் படையினரிடம் சிக்கி சிறைக்குச் சென்றவர்களும் உண்டு.
அமெரிக்காவில் ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொடிய டங்கி பயணத்தைப் பல இந்தியர்கள் மேற்கொள்கின்றனர். அமெரிக்காவில் வாழ வேண்டும் என்ற ஆசையும் கனவும், பல இந்தியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல வைக்கிறது.