வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மர்ம நபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி விரைவு ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது இரு மர்ம நபர்கள் கர்ப்பிணி பெண்ணிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ரயில் வேலூரை நெருங்கும் சமயத்தில் கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணை, அந்த நபர்கள் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் கத்தி கூச்சலிடவே ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். கே.வி குப்பம் அருகே தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், கர்ப்பிணி பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளி விட்ட நபர்கள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.