வடலூரில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா-சினேகா தம்பதி. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தையான மைதிலி, அடுப்பு பற்ற வைப்பதற்காக வாட்டர் பாட்டிலில் வைத்திருந்த டீசலை, தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.