இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில், இலவச ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, நோய்நொடியில்லாமல் நீண்டநாள் வாழ உணவு கட்டுப்பாடு வேண்டும், உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். அறுசுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கடவுள் எல்லா உயிர்களிடமும் இருக்கிறார். இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எல்லா உயிர்களுக்கும் நாம் அன்பு காட்டி வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் ஊக்கத் தொகை வழங்கி ஆசிர்வதித்தார்.