மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக போராட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளியின் தாளாளர், அறங்காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலரும், தாளாளரின் கணவருமான வசந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த பெற்றோரும், உறவினர்களும் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே, பாலியல் தொல்லை அளித்த அறங்காவலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து கவிழ்த்தனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி தாளாளர், முதல்வர், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அறங்காவலர் வசந்தகுமார், தாளாளர் சுதா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.