கன்னியாகுமரி அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் தோட்டமலை, கிளாமலை, மோதிரமலை, மயிலாறு உட்பட 48 மலையோர கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் அரசு, தனியார் ரப்பர் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
மயிலாறு பகுதியில் செயல்படாமல் கிடந்த அரசு ரப்பர் கழக தொழில் கூடத்தை சுயம்பு லிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அதில் 10 ஏக்கர் பரப்பளவில் வாழை, அன்னாசி ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலம் முழுக்க சுற்றுச்சுவர் அமைத்துள்ள நிலையில், நுழைவு வாயிலை உடைத்த ஒன்பதிற்கும் மேற்பட்ட யானைகள் விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. விளைநிலத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வாழை, அன்னாசி பயிர்கள் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, விளைநிலத்தில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.