இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள், இந்த வார தொடக்கத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய IND-TN-11-MM-258 என்ற பதிவு எண் கொண்ட படகையும் இலங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த மீனவர்களின் வருமானத்தை தான் அவர்களது குடும்பத்தினர் நம்பி உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை, விரை.வில் சிறையில் இருந்து விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.