இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இரண்டு முறை ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்க முடியாமல் பாஜகவிடம் தோல்வியடைந்திருக்கிறது. மதுபானக் கொள்கையில் தொடங்கி ஆடம்பர வீடு வரை அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்ந்ததற்கான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் 70 இடங்களில் 67 இடங்களையும், 2020 ஆம் ஆண்டில் 62 இடங்களையும் கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தத ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
டெல்லி, பஞ்சாப் என இரு இடங்களில் ஆட்சியமைத்து தேசிய கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மியின் இந்த தோல்வி அந்த கட்சி வீழ்ச்சியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. எந்த டெல்லியைச் சேர்ந்த மக்கள் ஆம் ஆத்மி கட்சியை அங்கீகரித்து வெற்றி பெறச் செய்தனரோ அதே டெல்லி மக்கள் தான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிப் பயணத்திற்கு முடிவுரையையும் எழுதியுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்த முதல் சில ஆண்டுகளில் கல்வி, குடிநீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து நிறைவேற்றப்படாமலே இருந்த வாக்குறுதிகள், மோசமான காற்றின் தரம் ஆகியவை ஆம் ஆத்மி ஆட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தன. தலைநகர் டெல்லியில் மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தியது.
அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் மதுபானக் கொள்கையில் கொண்டு வந்த மாற்றமும் அக்கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. மதுபானக் கொள்கையில் நடைபெற்ற ஊழலில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், அதன் பின்னர் முதலமைச்சர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகியதும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியை ஆட்சி செய்ய தகுதியற்ற கட்சி என்ற விமர்சனம் பரவலாக எழத் தொடங்கியது.
ஊழலை ஒழிப்பதற்காக ஆம் ஆத்மி எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த பத்தாண்டு கால ஆட்சிக்காலத்தில் ஊழலை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது டெல்லி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஊழலை ஒழிக்கவந்த எளிமையான முதல்வர் எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அரவிந்த் கெஜ்ரிவாலே தனது அரசு இல்லத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து அலங்கரித்தது அவரின் ஊழல் ஒழிப்பு நாடகத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தியது.
ஆறு கோடி ரூபாய் செலவில் 80 ஜன்னல் திரைகள், 15 கோடி ரூபாய் செலவில் குளியல் அறை மற்றும் கழிவறைக்காக சானிட்டரி பிட்டிங்ஸ் மட்டுமல்லாது தானாக மூடி திறக்கும் மேற்கத்திய கழிவறை மட்டும் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் அதி நவீன ஸ்மார்ட் தொலைக்காட்சி, ஸ்மாட் பிரிட்ஜ், ஷோபா, காபி தயாரிக்கும் இயந்திரம் என வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்ப முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி அரசு மீதான மக்களின் அதிருப்தியும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழலை ஒழிக்கிறோம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி மக்களை ஏமாற்றும் அனைவருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் எழுதியிருக்கும் முடிவுரை தான் சிறந்த உதாரணமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.