இந்தியாவில் பின்தங்கியுள்ள பழங்குடி மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவே மை பாரத் திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி இருப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மை பாரத் திட்டத்தின் கீழ் 16-வது பழங்குடியினர், இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி துவக்க விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள், ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, தங்களுடைய பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிவித்து கெளரவப்படுத்தினர். இதனை தொடர்ந்து பழங்குடியின மாணவர்களின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி, மாணவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு அவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி,
இந்தியா என்பது பல விதமான மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்ட நாடு என தெரிவித்தார். அந்த வகையில் மத்திய அரசின் மை பாரத் திட்டம் என்பது மற்ற மாநிலங்களில் உள்ள பல்வேறு கலாச்சார புரிதல்களை மாணவர்களுக்கு உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி உலகில் மிகவும் தொன்மையான மொழி என்றும், தனக்கு தமிழ் பேசுவதில் சிரமம் இருந்தாலும் தமிழ் மொழியை புரிந்து கொள்வதாக ஆளுநர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ளதால், மொழி நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்காது என அவர் ஊக்கப்படுத்தி பேசினார்.