டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி, இம்முறை மக்களின் ஆதரவை பெறத் தவறியதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமானதாக முன்வைக்கப்படுகின்றன.
ஊழலை ஒளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனல், 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 10 ஆண்டுகள் டெல்லியை அவர் ஆட்சி செய்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் ஆம் ஆத்மி அரசு மீது முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக ஆம் ஆத்மி அரசு மீதான மதிப்பு டெல்லி மக்களிடையே படிப்படியாக குறைந்தது.
இரண்டாவதாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் புதிதாக சொகுசு பங்களாவை கெஜ்ரிவால் கட்டிக் கொண்ட விவகாரமும் டெல்லி மக்களிடையே அதிருப்தியை அதிகரித்தது. அரசு பங்களா, கார் உள்ளிட்ட எந்த வசதிகளையும் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை கெஜ்ரிவால் பின்பற்றாமல், சொகுசு பங்களாவை கட்டிக் கொண்ட விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக சிறப்பான முறையில் பரப்புரையில் முன்வைத்தது.
துணை நிலை ஆளுநர் உடனான நிர்வாக ரீதியான முரண்பாடுகளை சுட்டிக் காட்டி, தனது அரசால் வளர்ச்சித் திட்டங்களை டெல்லி மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என மக்கள் மத்தியில் குறிப்பிட்டார் கெஜ்ரிவால்…. ஆனால், இதனையும் டெல்லி மக்கள் ஏற்கவில்லை. மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் நிர்வாக திறமையின்மையை தான் இது காட்டுவதாக அமைந்தது….
இலவச மின்சாரம், குடிநீர், பேருந்து போன்ற திட்டங்களை ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்தாலும், சுகாதாரமான குடிநீர், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசால் வழங்க முடியவில்லை. இதுவும் ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.
2025ஆம் ஆண்டுக்குள் யமுனை ஆற்றை சுத்தப்படுத்துவேன் எனக் கூறி வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், அதனை நிறைவேற்ற முடியாத காரணத்தால், யமுனை நதியில் விஷம் கலக்கப்பட்டதாக அண்டை மாநில அரசுகளை மையப்படுத்தி குற்றம்சாட்டினார். இதுவும் டெல்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான நன்மதிப்பை குறைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.