இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி தமது மகனின் திருமணத்தை எளிமையாக நடத்தியதுடன் பத்தாயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடைபெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது. கல்யாணம் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. உள்ளூர் தொடங்கி உலகப் பிரபலங்கள் வரை அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்றனர்.
மணமகன் ஆனந்த் அம்பானியின் தாய் நீடாவும், அண்ணி SHLOKA-வும் தலா 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லஸை அணிந்திருந்தனர். ஆனந்த் அம்பானி கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 67 கோடியே 50 லட்சம் ரூபாய். இப்படி ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்துக்கு ஆன மொத்தச் செலவு 5 ஆயிரம் கோடி ரூபாய். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா திருமணத்துக்கு ஆன செலவைவிட இது அதிகம்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டதே? இப்போது எதற்கு இந்தத் தகவல்கள்? என்ற கேள்வி எழலாம். அதற்கு பதில் அதானி வீட்டுத் திருமணம் என்பதே.
இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான தொழிலதிபர்களாகவும் முன்னணி செல்வந்தர்களாகவும் இருப்பவர்கள் முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும். இருவரும் தொழில்முறை போட்டியாளர்கள் என்பதால் மகன் திருமணத்திலும் அம்பானிக்கு TOUGH கொடுப்பார் அதானி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக மிக எளிமையாக தமது இளைய மகன் ஜீத்தின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கௌதம் அதானி.
ஜீத்துக்கும் பிரபல வைர வியாபாரி ஜெயின்ஷாவின் மகள் திவாவுக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜெயின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இருகுடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
திருமணப் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கௌதம் அதானி, “எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் ஜீத்தும், திவாவும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இது ஒரு சிறிய மற்றும் மிகவும் தனிப்பட்ட விழாவாக இருந்தது, எனவே நாங்கள் விரும்பினாலும்கூட அனைத்து நலம்விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜீத் – திவா தம்பதியை அன்போடு ஆசீர்வதிக்கும்படி உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்” எனக்கூறியுள்ளார்.
மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினால் எவ்வளவு செலவாகுமோ அதைவிட அதிக தொகையான 10 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு நலத்திட்டங்களுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார் கௌதம் அதானி. சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 21 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அதானி குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்தனர். இனி ஆண்டுதோறும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தொழிலாளி தமது குழந்தையை எப்படி வளர்ப்பாரோ அப்படியே தாமும் செயல்பட்டதாக கூறியிருக்கும் கௌதம் அதானி, தமது செல்வத்தை வெற்று ஆடம்பரங்களுக்காக வாரி இறைக்காமல் நல்ல காரியங்களுக்கு கொடுத்திருப்பது வரட்டு கௌரவத்துக்காக வீண் செலவு செய்பவர்களுக்கு முக்கியமான பாடம்.
ஒவ்வொரு ரூபாயை செலவழிக்கும் போதும் அதை ஈட்ட நாம் பட்ட சிரமத்தையும் உழைத்த உழைப்பையும் எண்ணிப்பார்த்தால் நிச்சயம் விரயச் செலவுகளை தடுக்கலாம்.