திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலின் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி பண மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில், சனீஸ்வர பகவானுக்கென்று தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரத்யேக வலைதளம் போலவே அச்சு அசலாக போலி வலைதளத்தை உருவாக்கி மர்மநபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த வலைதளத்தில் விசேஷ நாட்களில் பல்வேறு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் குறித்து விளம்பரப்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் பக்தர்கள் சிலர் அளித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி வழக்கில் கோயில் நிர்வாகிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.