திருப்பரங்குன்றம் மலையில் சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்தாக ஆடு, கோழிகளை பலியிடுவோம் என்று மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆடுகளுடன் செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
மேலும், மலையை சுற்றி ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மற்றும் ஆதரவாளர்கள் அசைவ பிரியாணி சாப்பிட்டது பெரும் சர்ச்சையானது.
இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், சமூக நல்லிணக்கத்திற்காக வரும் 18ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி விருந்தாக ஆடு, கோழிகள் பலியிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.