விராலிமலை முருகன் மலைக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா சரண கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள சுப்பிரமணியர் மலைக் கோயிலில் கடந்த 2ஆம் தேதி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை 9.45 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. மலைமேல் இருந்து கீழே இறங்கி வந்த முருகப்பெருமான் வள்ளி -தேவயானையுடன் தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.