தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.