திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை சேர்ந்த 26 வயதான இளம்பெண் தூத்துக்குடியில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சொந்த ஊருக்கு புறப்பட்ட இளம்பெண் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் ஓகா விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்துள்ளார்.
ரயில் கொடைரோடு ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதே பெட்டியில் மதுபோதையில் அமர்ந்திருந்த இளைஞர் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் 139 என்ற ரயில்வே அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
அதனடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து ரயிலில் ஆய்வு செய்த ரயில்வே போலீசார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பதும், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.