ஈரோடு அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியில் பாடல் பாடியும், கும்மி அடித்தும் பெண்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக நிலா பிள்ளையாருக்கு சோறு எடுக்கும் நிகழ்வு நிலா பிள்ளையார் வழிபாடாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம், கைகாட்டி வலசு பகுதியில் நிலா பிள்ளையார் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
5 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் உணவு சமைத்து எடுத்து வந்து பிள்ளையார் மற்றும் நிலாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். மேலும், சிறுமி ஒருவரை நிலா பிள்ளையாக பாவித்து வழிபாடு நடத்திய பெண்கள், கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் சிறுவர், சிறுமியர், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது போல் நிலாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிலா பிள்ளையார் விழா நடத்தப்படுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ஒற்றுமையாக இருப்பதற்காகவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் நிலா பிள்ளையார் விழா கொண்டாடப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.