கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரி பள்ளத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணி தொடர்பாக இருதரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது.
நாகர்கோவிலை அடுத்துள்ள மேல ஆசாரி பள்ளத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கு மக்களாக இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள பங்குத் தந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பங்குத்தந்தை செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஆலயத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள குருசடியை அகற்றிவிட்டு புதிதாக ஒன்றை அமைக்க பங்குத்தந்தை தலைமையிலான நிர்வாகிகள் முற்பட்டனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுவதால் ஏ.எஸ்.பி. லலித் குமார் தலைமையில் ஏராளமாக போலீசார் பாதுகாப்பு பணிக்கான அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.