ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும் நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஜே.பி.பர்திவாலா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், அமைச்சரவை முடிவின்படியே ஆளுநர் செயல்பட முடியும் எனவும், அவர் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
மேலும், மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசு தரப்பின் முந்தைய வாதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆளுநர் தரப்பில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநரால் 4 வகையான முடிவுகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.