சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.
சமய் ரெய்னா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பிரபல யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வைத்து India’s Got Latent என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல யூடியூபரான ரன்வீர் அல்லாபாடியா கலந்து கொண்டு ஆபாசமான வகையில் பேசியிருந்தார்.
அதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது பாஜக நிர்வாகிகள் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோட்டீஸ் அடிப்படையில், சர்ச்சைக்குரிய வீடியோவை யூடியூப் தனது தளத்தில் இருந்து நீக்கியது.
இதேபோல் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களான சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் ரன்வீர் அல்லாபாடியா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்ற தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ரன்வீன் அல்லாபாடியாவை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.