அருப்புக்கோட்டை அருகே உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வந்தனர்.
இந்த கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், மாணவர் சேர்க்கையின் போது சமர்ப்பித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை திரும்பித் தர வலியுறுத்தி மாணவிகள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு செய்து அங்கீகாரம் பெறாதததை உறுதி செய்ததையடுத்து , கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உரிய ஆவணமின்றி செயல்படும் கல்லூரிக்கு சீல் வைக்கப்படுவதுடன் கல்விக்கட்டணத்தை திரும்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.