எடப்பாடி அருகே தனியார் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மாலை வழக்கம்போல் வேனில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது வேனில் இடம் பிடிப்பதில் இரு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கந்தகுரு என்ற மாணவரை, சரவணன் என்ற மாணவர் மார்பு பகுதியில் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மயக்கமடைந்த கந்தகுரு உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கந்தகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பள்ளியின் நுழைவாயிலில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.