வாழப்பாடி அருகே கல்வராயன் மலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளி மாணவரின் கை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான சமையலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை கல்வராயன் மலையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 191 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடி கொண்டிருந்த மாணவர்களை சமையலர் ஜெயராமன் கண்டித்துள்ளார். மேலும், நாகராஜன் என்ற மாணவரை கடுமையாக தாக்கியதால் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாணவரின் தாத்தா கேட்டபோது சமையலர் சண்டையிட்டதால், கோபமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தலைமறைவான சமையலரை போலீசார் தேடி வரும் நிலையில், சமையலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.