வடமாநில இளம்பெண் கடத்தல் சம்பவத்தின் எதிரொலியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் எதிரொலியாக கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன்பு ஓட்டுநரின் பதிவுச் சான்றிதழை பயணிகள் பரிசோதிக்கலாம் எனவும் பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.