பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப் படுகிறது. வானொலியை ஒரு சிறந்த ஊடகமாகக் கொண்டாடவும் போற்றவும் ஒரு வாய்ப்பாக இந்த நாள் சர்வதேச அளவில் கொண்டாடப் பட்டு வருகிறது.
உலக வானொலி தினம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு!
வானொலி என்பது நீண்ட காலமாக பிரபலமாக இருக்கும் ஒரு ஊடகமாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து தகவல்களைப் பெறவும், மக்களுக்கு கல்வி கற்பிக்கவும், கலாச்சாரங்களைக் கடந்து நம்மை வெளிப்படுத்தவும், நிச்சயமாக மனத்துக்குப் பிடித்த இசையைக் கேட்கவும் ஒரு சிறந்த தளமாகும். இன்றும் உலக அளவில் மிக அதிக அளவில் நுகரப்படும் ஊடகங்களில் வானொலியே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
1895 ஆம் ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பு, மார்கோனியால் நிகழ்த்தப் பட்டது. அதாவது இத்தாலியிலிருந்து முதல் வானொலி சமிக்ஞை மூலம் ஒரு தந்தியை அனுப்பி சாதனை படைத்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு 1905 ஆம் ஆண்டு தான், பெரும்பாலான மக்களைச் சென்றடையும் ஊடகமாக வானொலி மாறியது. தொடர்ந்து 1920 களில் தான் முதன் முதலாக வானொலி வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்தது.
1936 ஆம் ஆண்டு, இந்தியாவில் அகில இந்திய வானொலி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. சுதந்திரத்தின் போது, இந்தியாவில் டெல்லி, பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா, லக்னோ மற்றும் திருச்சி என முக்கிய ஆறு வானொலி நிலையங்கள் இருந்தன.
1956 முதல் அதிகாரப்பூர்வமாக அகில இந்திய வானொலி ஆகாஷ்வாணி என்று அழைக்கப்படுகிறது. அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக என்பதே ஆகாஷ் வாணியின் குறிக்கோளாகும்.
ஆகாஷ்வாணி உலகின் இரண்டாவது பெரிய வானொலி நெட்வொர்க் ஆகும். நாட்டின் அனைத்து மக்களுடனும் ஆகாஷ் வாணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த சூழலில், 2010 ஆம் ஆண்டு ஸ்பெயின் வானொலி அகாடமி வானொலி தினம் கொண்டாட முடிவு செய்தது. அதற்காக ஒரு முன்மொழிவை கொண்டு வந்தது. வானொலியை கௌரவிக்கும் வகையில் ஒரு சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று யுனெஸ்கோவிடம் கேட்டுக் கொண்டது. பிறகு, அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, அதற்கான பரிசீலனை மனுவை யுனெஸ்கோவிடம் ஸ்பெயின் வானொலி அகாடமி கொடுத்தது.
இந்தப் பரிந்துரையை யுனெஸ்கோவின் நிர்வாகக் குழு பல மாதங்களாக பரிசீலித்தது. பல்வேறு சர்வதேச அமைப்புகள், ஒலிபரப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள், வானொலி தொழிற்சங்கங்கள் மற்றும் பல நாட்டு வானொலி நெட்வொர்க்குகளின் ஆதரவை முழுமையாக பெற்ற பின் வானொலி தினத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தது.
இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யுனெஸ்கோவின் 36வது பொது மாநாடு நடந்தது.இந்த கூட்டத்தில் தான், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து, அதற்கு அடுத்த ஆண்டு, ஐநா சபையின் பொதுக்குழு, உலக வானொலி தினத்தை அங்கீகரித்தது, இதன் மூலம்,சர்வதேச அளவில் ஒரு முக்கிய தகவல் தொடர்பு வழிமுறையாக, வானொலி மாறியது.
முன்னதாக,1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி ஐநா சபையில் வானொலி நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில், உலக வானொலி தினம் கொண்டாடப் பொருத்தமான நாளாக பிப்ரவரி 13 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அனைத்து குரல்களும் பேசுவதற்கும் கேட்கப் படுவதற்கும் ஒரு அரங்காக நிற்கும் திறன் வானொலிக்கு உண்டு என்று ஐநா சபை, பன்முகத் தன்மை குறித்த சமூகத்தின் அனுபவத்தை வடிவமைக்கும் திறனும் வானொலிக்கே உண்டு என்று பாராட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், உலக வானொலி தினம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த கருப்பொருளை ஐநா சபை தேர்ந்தெடுத்து வழங்குகிறது. சென்ற ஆண்டுக்கான கருப்பொருள், வானொலி ஒரு நூற்றாண்டு தகவல் பொழுது போக்கு மற்றும் கல்வி என்பதாகும். இந்த ஆண்டுக்கான உலக வானொலி தினத்தின் கருப்பொருள், காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் தருகிறது.
சரியாகச் செய்தால், வேறு எந்த வகையான தகவல்தொடர்புகளையும் விட வானொலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்வதுண்டு. உலக வானொலி தினத்தில், உலகளாவிய தகவல் தொடர்புக்கு வானொலி எவ்வளவு முக்கியம் என்பதை நினைவில் கொண்டு போற்றுவோம்.