சென்னை திருவொற்றியூர் ரயில்வே இருப்புப் பாதையில் கல்வைத்த சம்பவத்தில் பிடிப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவரை, எச்சரித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் நோக்கி செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். கடந்த வாரம் திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே உள்ள இணைப்பு தண்டவாளத்தில் பெரிய இரும்புத்துண்டு மற்றும் கற்கள் இருந்ததை கண்டறிந்த ரயில்வே போலீசார் அகற்றினர்.
இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தண்டவாளத்தில் கற்களை வைத்து 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுவனை பிடித்து கெல்லிஸ் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை எச்சரித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், சிறுவனை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.