தொடர் புகார்களுக்கு உள்ளாகும் நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி இருப்பதாக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கடந்த மாதம் இதே மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரை சைக்கிளில் வைத்து அவரது மகன் அழைத்து சென்ற சம்பவம் அரங்கேறியது.
அண்மையில் விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் மதுபோதையில் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தவறான சான்றிதழை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு நெல்லை அரசு மருத்துவமனை மீது தொடர்ந்து புகார் எழுந்துவரும் நிலையில், மருத்துவமனை முதல்வர் மீதும் அலுவலர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி அறப்போராட்டம் நடைபெறும் எனவும் இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.