காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து முதல் குழுவினர் சென்ற ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடா்புகளை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை வாரணாசியில் விமர்சையாக நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆயிரம் பேரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 220 பேர் கொண்ட முதற்குழு வாரணாசிக்குப் புறப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரணாசிக்கு அவர்கள் சென்ற சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வாரணாசிக்கு புறப்பட்டவர்கள், காசி தமிழ்ச் சங்கமம் எனும் வரலாற்று நிகழ்வில் சிறுதுளியாக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.