தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..
38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய செலினா, முதல் 2 செட்டை கைப்பற்றினார்.
ஆனால் அடுத்த 3 செட்களிலும் மகாராஷ்டிர வீராங்கனையிடம் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு விளையாடிய செலினா, கடைசி 2 செட்டை வசப்படுத்தினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு 4-க்கு 3 என்ற செட் கணக்கில் செலினா வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டிராவின் ஜாஷ் மோடியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 3-க்கு 4 என்ற அதிர்ச்சித் தோல்வியை சந்தித் சத்யன், வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 27 தங்கம், 30 வெள்ளி, 34 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடத்தில் நீடிக்கிறது. சர்வீசஸ் ஸ்போர்ட் கட்டுப்பாட்டு வாரிய அணி 68 தங்கம் உட்பட 121 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் மகாராஷ்டிரா அணி 198 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.