திமுக தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி மக்கள் பற்றி கவலை இல்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் 13ஆம் தேதி மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு (A1540- இரவு 9.20 மணி) ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் எந்த முன் அறிவிப்பும் விளக்கமும் இல்லாமல், இருக்கை தரமிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால், மற்ற பயணிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக உள்ளதாகவும், பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவை தரங்களை புறக்கணிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள பதிவில், திமுக தென் சென்னைபாராளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி மக்கள் சிரமமான சூழ்நிலையில் வாழும் வாழ்க்கை பயணத்தைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்துள்ளார். தன் வசதியான பயணத்தைப் பற்றியே அவருக்கு கவலை என்றும், இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனது மக்களுக்காக அல்ல தங்களுக்காகவே என்றும் அவர் கூறியுள்ளார்.