தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் CBSE பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், 10ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நடுவிக்காடு பகுதியில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளை தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, CBSE-க்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தனி தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர். தங்களது பிள்ளைகள் எப்படியாவது நாளை தேர்வு எழுத வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.