விமானத்தில் வரும் போது உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் வகையில், உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி ஆணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய பெண், 135 கிராம் எடையுள்ள 10 வளையல்கள் அணிந்து வந்ததாக கூறி, அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல இலங்கையில் இருந்து வந்த பெண், 88 கிராம் தாலிச்சங்கிலி அணிந்திருந்ததாகக் கூறி அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திரும்பத்தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அப்போது உடலில் அணிந்திருக்கும் நகைகளை உடமைகளாக கருதி சுங்கவரி விதிக்க முடியாது எனக் கூறி நகைகளை திரும்ப ஒப்படைக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள் உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.